Wednesday, March 19, 2008

அஞ்சலி:ரகுவரன்


சென்னை: பிரபல நடிகர் ரகுவரன் காலமானார். அவருக்கு வயது 60.

வில்லன், ஹீரோ, குணசித்திரம் என பல்வேறு பாத்திரங்களில் நடித்த மிகச் சிறந்த நடிகர் ரகுவரன்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரகுவரன் பல காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது.
சமீபத்தில் காலில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

இந் நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து அவரை கவனித்துக் கொள்ள நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் இன்று அதிகாலை அவர் மயங்கினார். இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரோகிணி மருத்துமனைக்கு மகனுடன் ஓடி வந்து கதறி அழுதார்.

பின்னர் அவரது உடல் தியாகராய நகர் ஜெகதாம்பாள் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் அருகே அமர்ந்து ரோகிணியும் மகன் சாய் சித்தார்த்தும் கதறி அழுது கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.

இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

என்பதுகளில் தமிழில் அறிமுகமான முக்கிய நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா மற்றும் முதல்வன் படங்கள் மறக்க முடியாதவை. 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர் படத்தில் சைகோத்தனமான வில்லன் என்ற பாத்திரத்துக்கு புதிய பரிமாணம் கொடுத்திருப்பார் ரகுவரன்.

இடையில் கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், என்வழி தனிவழி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இதில் கூட்டு புழுக்களில் அவரது எதார்த்தமான நடிப்பு மறக்க முடியாதது.

ரஜினிக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அதனால்தான் அவரை தனது பெரும்பாலான படங்களில் நடிக்கச் செய்திருந்தார்.
சிவாஜியில் கூட சில காட்சிகளில் நடித்திருந்தார் ரகுவரன்.

சமீபத்தில் ரிலீசான தொடக்கம் படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்திருந்தார் ரகுவரன். அவர் நடித்து கடைசியாக வந்த படம் சில நேரங்களில். இதில் சைக்கோத்தனமான மருத்துவர் வேடத்தில் நடித்திருந்தார்.

யாரடி நீ மோகினி, அஜீத்தின் புதிய படம் ஆகியவற்றிலும் அவர் நடித்து வந்ததார்.

ரோகிணியுடன் திருமணம்- பிரிவு:

ரகுவரனுக்கு குடி போதைப் பழக்கம் இருந்தது. அவரை இந்த கொடிய பழக்கத்திலிருந்து மீட்க முயன்றவர்களில் ஒருவர்தான் ரோகிணி.

நாளடையில் இந்த பழக்கம் காதலாக மாறியது. நடிப்புத் தொழிலில் மிக உச்சத்தில் இருந்த நேரத்தில் ரோகினியை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்தனர். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். ரகுவரனை போதைப் பழக்கத்திலிருந்து திருத்த முடியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து வசிப்பது கடினம் என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் ரோகிணி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் போதையிலிருந்து இப்போது முழுவதுமாக மீண்டுவிட்டதாக ரகுவரன் கூறியிருந்தார்.

இடையில் தனது மகனை மட்டும் அடிக்கடி பார்த்து வந்தார் ரகுவரன்.

நடிப்பைத் தவிர இசையில் தீவிர ஆர்வம் இருந்த்து ரகுவரனுக்கு. சில இசை ஆல்பங்களையும் தயாரித்திருந்தார். தீவிர சாய் பாபா பக்தரான ரகுவரன் தனது மகனுக்கு சாய் சித்தார்த் என்றே பெயர் சூட்டியிருந்தார்.

ரகுவரன் வாழ்க்கைக் குறிப்பு:

1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா.

ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது.

சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார்.

ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.

ரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார்.

தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன். அவரது மரணம், தமிழ்த் திரையுலகுக்கு பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

குடும்பம்:

ரகுவரனின் தந்தை வேலாயுதம், தாய் கஸ்தூரி. இவருக்கு ரமேஷ், சுரேஷ் என்ற சகோதரர்கள் உள்ளனர். ரோகிணியை பிரிந்த பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

இரங்கல்:

ரகுவரனின் உடலுக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சத்யராஜ், விஜய், தலைவாசல் விஜய், விவேக், நடிகை ரேவதி உள்பட ஏராளமானார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ரகுவரன் உண்மையிலேயே ஒரு இணையில்லா நடிகர் என்றும் அவரது மறைவு தன்னை பெரும் துயரத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
News Source: Thats Tamil

7 comments:

மருதநாயகம் said...

தமிழ் சினிமா ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டது, அனுதாபங்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு சிறப்பான கலைஞரின் இழப்பு!
அடியேன் அஞ்சலி செலுத்துகிறேன்!

Thekkikattan|தெகா said...

இவ்வளவு சின்ன வயசிலேயே, இழக்க வேண்டியதாப் போச்சே... ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்து விட்டது நிச்சயமாக :-(.

எனது அஞ்சலிகள்!

Unknown said...

தமிழ் திரையுலகம் ஒரு நல்ல நடிகனை இழந்து விட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கருப்பன் (A) Sundar said...

தனக்கென ஒரு பாணியில் கலக்கிக் கொண்டிருந்தவர். ரகுவரன் மிகவும் எளிமையானவர்! அவரது மறைவு தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு பெரும் இழப்பு.

சென்ஷி said...

எனது அஞ்சலிகளை இங்கு பதிவு செய்கிறேன் :((

Kasi Arumugam said...

:-(

வித்தியாசமான நடிப்பால் தனித்துத் தெரிவார் ரகுவரன்.

ஆழ்ந்த இரங்கல்கள்.