
சீனியம்மா தெரியும்ல எல்லாருக்கும். அவங்கதாங்க..கொளக்கட்டாங்குறிச்சிக் கெழவி. அவங்க திண்ணைல உக்காந்திருப்பதான்
கே.ஆர்.எஸ் அந்தம்மா கண்ணுல மாட்டுனாரு. சீனியம்மா விடுவாங்களா...படக்குன்னு கூப்புட்டாங்க.
"ஏலேய்..இங்ஙன வா...ஒரு முக்கியமான வெசயம்."
கேயாரெஸ்க்குப் பயந்தான். யார்ரா இது ஒரு பெரியம்மா கூப்புறாகளேன்னு. "என்ன பாட்டீ"ன்னு பயந்தாப்புல போயி நின்னாரு.
சீனியம்மாக்குக் கோவம் வந்துருச்சுல்ல. "என்னது பாட்டியா? எங்கூர்ல எல்லாம் பெரியம்மான்னு கூப்புடுவாக. ஆமா...நீ எந்தூரு?"
திக்கித் தெணறுச்சு. "வாழப்பந்தல் பெரீம்மா"
"என்னல இது...பந்தல்ல வாழையக் கட்டுவாக...வாழைல பந்தலைக் கட்டுவாகளா! என்னவோ போ..."
"இதுக்குதான் கூப்பிட்டீங்களா?"
"இல்ல.....இங்ஙன உக்காரு மொதல்ல"ன்னு திண்ணயக் காட்டுனாக சீனியம்மா. கேயாரெஸ்சு உக்காந்ததும்..."ஆமா இங்குட்டு எங்குட்டு வந்த? பேந்தப் பேந்தப் பாத்துக்கிட்டிருக்க..இங்குட்டெல்லாம் வெவரமா இருக்கனுமப்பூ. இல்லைன்னா கிண்டிக் களியாக்கீருவாக. சரியா."
"சரி பெரீம்மா. இதுக்குத்தான் கூப்பிட்டீங்களா?"
"இல்ல. மொதல்ல இங்க வந்த காரணத்தச் சொல்லுவியா...அத விட்டுட்டு..."
"அது இங்க பெருமாள் கோயில்...." இழுத்தாரு கேயாரசு.
"பெருமா கோயிலா? கொளக்கட்டாங்குறிச்சீல என்ன பெருமா கோயிலு இருக்கு. அந்த முக்குல காச்சக்கார அம்மங்கோயிலு...அதுவும் வெட்டவெளியிலதான். இந்த முடுக்குல கோப்பம்மா கோயிலு. எல்லாம் பொம்பள சாமிதான். ஆம்பள சாமியெல்லாம் இங்க கெடையாது."
"இல்ல பெரீம்மா...பெருமாள் கோயில் இங்க இருக்கு. அதுக்குத்தான் வந்தேன்."
"சொன்னாக் கேக்க மாட்டீங்கியே! ஏமுல இப்பிடி? இங்குட்டுக்கூடிப் போ...செவலாருபட்டி வரும்...அதையும் தாண்டிப் போ...சாத்தூரு வரும். அங்குட்டுத்தான் இருக்கு பெரிய பெரிய கோயிலுக. அது சரி...எதுல வந்த?"
"காருல வந்தேன் பெரீம்மா. இதுக்குத்தான் கூப்டீங்களா?"
"இல்ல...அது வேற விசயம். ஆமா...அந்த ஊதாக் காரா ஒங்காரு...நல்ல பெரிய வண்டியாத்தான் இருக்கு."
அப்பன்னு பாத்து வீட்டுக்குள்ள இருந்து கறி வதக்குற வாசம் வந்துச்சு. கேயாரசு அப்படியே மயங்கி வாசனையப் பிடிக்காரு.
"நல்லாத்தாம் மோப்பம் பிடிக்க. ஆமா நீ கறி திம்பியா? சொல்லு"
"இதுக்குத்தான் கூப்டீங்களா?"
"இல்ல. கேள்விக்கு மொதல்ல சொல்லு."
"அது வந்து....வாசனை பிடிக்கும். வாசனை வெச்சே எதெதுன்னு சரியாச் சொல்லீருவேன்."
"ஆகா. அப்படியா. நல்லதுதான்."
"சரி. எதுக்குக் கூப்டீங்க?"
"ஓ கூப்டேன்ல....சரி...கால்ல விழு"
"என்னது?"
"ஏம்ப்பா இந்தப் பயம். எங்கால்ல விழுந்தா தப்பில்லை. அதான் பாட்டீன்னு சொன்னியே."
மொதல்ல யோசிச்சாலும் கேயாரசு சீனியம்மா கால்ல விழுந்து எந்திருச்சாரு. ஒரு பத்துரூவாத்தாள கேயாரசு கைல வெச்சி, "இன்னைக்கு ஆகஸ்ட்டு 9. ஒம் பொறந்த நாளுதான. அதுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்புட்டேன். நீ இன்னைக்குப் பெருமாள் கோயிலத் தேடிப் போவன்னு மயிலாரு ஏற்கனவே சொல்லீட்டாரு. அதாங் கூப்புட்டு வாழ்த்துனேன். ரொம்ப நல்லாரு"ன்னு வாழ்த்துனாக. மக்கா...நீங்களும் வாழ்த்துங்க.
வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்