Friday, June 12, 2009

Help: வலைப்பதிவர்களுக்கும் ஒரு உருக்கமான வேண்டுகோள்!

நம் தமிழினம் இன்று இலங்கையில் பட்ட பாடுகள் இன்னும் நம் கண்களைவிட்டே கூட மறையவில்லை. அய்யோ அம்மா, தெய்வமே என்றெல்லாம் கூக்குரலிட்டு, செல்லடித்து, உடல்வெந்து, உண்ண உணவின்றி, உடுத்த உடைகளின்றி, காயங்களுக்கு கட்டிடக்கூட முடியாமல் தப்பிபிழைத்து இன்று தாம் எங்கிருக்கிறோம் என்று கூட வெளியில் இருப்பவர்களுக்கு / தம் குடும்பத்தார்க்கு சொல்லமுடியாமல் பலர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் மாணவிகள் வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்புவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்துவருகிறார்கள். அவர்களின் நிலைமை மிகவும் கொடுமையானது. தம் தந்தை, தாய் உயிருடன் இருக்கிறார்களா என்று கூட அறியமுடியாத சூழல் அங்கே நிலவுகிறது. அவர்களுக்கு இதுவரை பணம் அனுப்பிவந்த அவர்கள் குடும்பத்தினர் அடுத்தவேலை சாப்பாட்டிற்கே வரிசையில் முகாம்களில் நின்றுகொண்டிருக்கலாம் அல்லது அமைதிப்பிரதேசத்தில் நிரந்தர அமைதியை அடைந்திருக்கலாம் என்று அஞ்சுகிறோம்.

இரண்டு மாணவிகள் கையில் பணமின்றி வேறுவழியும் தெரியாமல் மரணத்தை தழுவியதாகவும் அறிகிறோம். இவ்வாறு தத்தளிக்கும் நம் தமிழ் மாணவர்களை அரசியல் விருப்பு வெறுப்பின்றி ஆதரவுக்கரம் நீட்டி அரவணைப்பது என்பது தமிழராய் பிறந்த, உணர்ந்த நம் அனைவருக்குமான வரலாற்று கடமையாகும். இப்பணியில் எம் நண்பர்கள் சிலர் இறங்கியுள்ளார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் உதவிக்காக அடையாளம் காணப்பட்டு காத்திருக்கிறார்கள். அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் தற்போது எம் புலம் பெயர் நண்பர்களால் உதவியளிக்கப்பட்டு தங்களது படிப்பை தொடர்கிறார்கள்... மற்றவர்கள் என்று உதவிவரும் என்று எதிர்பார்த்து உண்ண உணவுக்குகூட வழியற்று காத்திருக்கிறார்கள். எனவே தமிழர்களே, வலைப்பதிவர்களே நாம் அனைவரும் நம்மால் இயன்ற ஒரு சிறு தொகையை இம்மாணவர்களுக்காக திரட்டி அளிக்கவேண்டிய அவசரத்தில் அவசியத்தில் உள்ளோம் என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ் வரலாற்றுக் கடமையில், மனிதாபிமான உதவியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் பதிவர்கள், திரட்டிகள், அமைப்புகள், வாசகர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றவர்கள் சர்வதேச தமிழ்மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்மின தோழன் ரிஷியை funds4students@googlemail.com என்ற மின்னஞ்சல் மூலமாக [ தொலைபேசி எண்: (044)7551449606 ] தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் இருக்கும் பதிவர்கள் , மாணவர்கள், மாணவ அமைப்புகள் இதை ஒரு இடரகற்றும் முயற்சியாகக் கருதி செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"இருப்பவர்களையாவது காப்போம்... நம் சிறு உதவிகளால்... நன்றி!"

ஓசை செல்லாவின் பதிவினை அப்படியே கொடுத்துள்ளோம். உதவும் கரங்களுக்கு நன்றி

1 comment:

Anonymous said...

தகவலுக்கு நன்றி நண்பரே . மாணவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். என் நண்பர்களிடமும் இத் தகவலை சொல்கிறான்.

அருண்
Sunnyvale- CA